வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் ரயில்களில் கஞ்சா கடத்துவதை தடுக்கும் வகையில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரகுமார், மீனா தலைமையில் காவலர்கள் நேற்று மாலை ஷாலிமர் – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முதல் ஈரோடு வரை சோதனை நடத்தினர்.ரயில் சேலம் வீரபாண்டி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்பதிவில்லாத பெட்டியில் 2 டிராலி சூட்கேஸ், 1 டிராலி பேக் மற்றும் 3 தோள் பைகள் ஆகியவை இருக்கையின் கீழ் கேட்பாரற்று கிடந்தது. இதையடுத்து போலீசார் இந்த சூட்கேஸ் மற்றும் பைகள் யாருடையது என விசாரணை நடத்தினர்.விசாரணையில் கேரள மாநிலம், கொல்லம், தங்கசேரி பாண்டிரிக்கல் தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் (வயது 22) மற்றும் கேரள மாநிலம் , கொல்லம், கோட்டம் காரா பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மகன் அனீஸ் (வயது 34) ஆகியோருடையது என தெரியவந்தது. மேலும் இவர்கள் விஜயவாடாவில் இருந்து கொல்லம் செல்வதற்கான முன்பதிவில்லா டிக்கெட் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சூட்கேஷ் மற்றும் தோள்பை ஆகியவைகளை திறந்து சோதனை செய்ததில் 100 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ 25 லட்சம் ஆகும். இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்ததுடன், 100 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.