Rock Fort Times
Online News

சிவகங்கை சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு: திருச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி?

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 26 மற்றும் 27-ந் தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் 26-ந் தேதி மாலத்தீவில் இருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கு அவர் விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அன்று இரவு திருச்சியில் தங்குகிறார். மறுநாள் 27-ந் தேதி அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் நடக்கும் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு பகல் 2.25 மணிக்கு பிரதமர் மோடி திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். இந்தநிலையில் தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அவர் திருச்சியில் 26-ந் தேதி இரவு அல்லது 27-ந் தேதி காலையில் பிரதமர் மோடியை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. பாஜகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். ஏனென்றால் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. தற்போது மீண்டும் இருகட்சிகளும் கூட்டணி அமைத்து இருக்கிறது. ஆனால் இந்த கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தும் உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில்தான் நடந்தது. 3-வது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்பு எடப்பாடி பழனிசாமி அவரை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்காக எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தனது பிரசாரத்தை மாற்றி அமைத்து உள்ளார். அதாவது 26-ந் தேதி அவர் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்வதாக இருந்தது. தற்போது அதனை 29-ந் தேதிக்கு ஒத்தி வைத்து இருப்பதாக அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் அதில் காரணங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் பிரதமர் மோடியை சந்திக்கத்தான் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அமித்ஷா, 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, அதில் பாஜக அங்கம் வகிக்கும் என்று கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்த கருத்து மோதல், 2 கட்சி தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியுடன் பேசுவார் என்று தெரிகிறது. அதேபோல திமுக மீதான மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் போட்டுள்ள வழக்குகளை வேகப்படுத்த எடப்பாடி பழனிசாமி கேட்டு கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்