தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தனது குன்னம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு புதிய மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை துவங்கி வைக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இதற்காக எழுமூர் கிராமம் வழியாக அமைச்சர் தனது காரில் சென்று கொண்டு இருந்தபோது வழியில் ஒரு மாணவன் நின்று கொண்டு சார்…ப்ளீஸ் காரை நிறுத்துங்கள் என்பது போல சைகை காட்டினான். இதை கவனித்த அமைச்சர் சிவசங்கர், ஓட்டுநரிடம் வாகனத்தை நிறுத்தச் சொல்லி, கீழே இறங்கி மாணவனிடம் சென்று, என்ன என்று கேட்டார். அப்போது அந்த மாணவன், தனது சொந்த ஊரான ஆயக்குடிக்கு நேரடியாக செல்வதற்கு பேருந்து வசதி இல்லை, அந்த பகுதிக்கு பேருந்து வந்துசென்றால் தங்கள் ஊர்மக்களுக்கு உதவியாக இருக்கும் என பணிவுடன் கோரிக்கை வைத்தான். மாணவனின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர், தன்னுடன் வந்திருந்த போக்குவரத்து துறை அலுவலரை அழைத்து, “இந்த மாணவன் சொல்லும் கிராமத்திற்கு பேருந்து வசதி செய்து கொடுக்குமாறு உத்தரவிட்டார். உடனே, அந்த மாணவன் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொண்டான். அமைச்சரின் காரை துணிச்சலுடன் நிறுத்திய அந்த மாணவன் எழுமூரில் உள்ள அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருவதால் மாணவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Comments are closed.