தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021 பிப்ரவரி 21ம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் பணியில் அப்போதைய சட்டம் – ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் நியமிக்கப்பட்டு இருந்தார். அப்போது அவர், பெண் எஸ்.பி. ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் போலீஸ் அதிகாரி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய காவல்துறை டிஜிபி திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி கண்ணன் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி விசாரித்து ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், ராஜேஷ்தாசுக்கு நீதிமன்றம் அளித்த 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்தார். இதனால், தான் எப்போது வேண்டுமானாலும் காவல்துறையினரால் கைது செய்யப்படலாம் என அறிந்த ராஜேஷ் தாஸ் 2 வாரங்களுக்கு முன்பே தலைமறைவானார். சென்னை தையூர் கோம நகர் பகுதியில் உள்ள அவரது வீடு, உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே, அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.