Rock Fort Times
Online News

விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை:- பாதிரியார் உட்பட 2 பேர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது…!

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே மாணவர்கள் விடுதியும் உள்ளது. இதில், 110 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள அய்யாவாடியைச் சேர்ந்த பாதிரியார் குழந்தைநாதன் விடுதி வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் முருகன் கோட்டையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டு, பாதிரியாருக்கான படிப்பையும் படித்து வருகிறார். பாதிரியாரின் நண்பரான இவர் விடுமுறை நாட்களில் விடுதிக்கு வரும் போது குழந்தைநாதன் அறையில் தங்கி கொள்வாராம். அப்போது சுந்தர்ராஜன் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தை நாதனிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் மாணவர்கள் அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்ததை அடுத்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராகுல் காந்தி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விடுதி வார்டன் குழந்தைநாதன் அவரது நண்பர் சுந்தர்ராஜன் ஆகிய இருவரையும் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்