திருச்சி காட்டூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியருக்கு இரு பெண் குழந்தைகள். இருவரும் பள்ளியில் படித்து வந்தனர். சம்பவத்தின்போது ஒரு பெண் குழந்தைக்கு 11 வயது. மற்றவருக்கு 13 வயது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் ஆரோக்கியதாஸ் (73) என்பவர் குழந்தைகள் இருவருக்கும் கணிதப்பாடம் சொல்லித்தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய பெற்றோர் குழந்தைகளை அவரிடத்தில் கடந்த 2016 வது ஆண்டு அனுப்பியுள்ளனர். அங்கு சென்ற குழந்தைகளுக்கு முதியவர் ஆரோக்கியதாஸ் பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்துள்ளார். குழந்தைகளின் இயல்பற்ற நிலையறிந்து பெற்றோர் விசாரித்ததில் முதியவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதுகுறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து ஆரோக்கியதாசை போக்சோ சட்டப்பிரிவில் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நேற்று ( 28.11.2023 ) இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், இரு குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக ஆரோக்கியதாசிற்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 65,000 அபராதம் விதித்தும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி அரசுக்கு பரிந்துரைத்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு வழக்கறிஞராக அரசு கூடுதல் சிறப்பு வழக்கறிஞா் ஜாகிர்உசேன் ஆஜரானார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.