திருச்சிக்கு டைடல் பார்க் முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் K.N. நேரு கூறினார்.
திருச்சி, தில்லைநகர் மக்கள் மன்றத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கும் புகைப்பட கண்காட்சியை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இணைந்து துவக்கி வைத்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே என் நேரு கூறியதாவது:
20 மாத காலம் அரசு சார்பில் கொண்டு வந்த திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து விளக்க கண்காட்சி இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக நிறைய நிதி வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் நேற்று பிரதமரிடம் வலியுறுத்தியதை பார்த்து இருப்பீர்கள்.
ஆளுநருடைய பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வாயிலாக பதில் அளித்து விட்டார் அதைப்பற்றி நான் ஏதும் கூற முடியாது.
ஆளுநர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் நேரடியாகவே தெரிவித்துவிட்டார்
திருச்சி அரிஸ்டோ மேம்பால பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளது அடுத்த வாரம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும்.
பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான எக்ஸ்பிரஸ் எலிவேட்டர் சாலைக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்திற்கு டைடல் பார்க் அறிவிப்பினை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
அதற்காக திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான பத்து ஏக்கர் நிலம் உடனடியாக வழங்கப்படும்.
டைடல் பார்க் போன்ற எண்ணற்ற திட்டங்கள் வர உள்ளதால் திருவெறும்பூர் – அசூர் வரையிலான பகுதிகள் ஏற்றம் பெற்று வருகிறது.
வருங்காலத்தில் திருச்சி ஒரு மிகப்பெரிய Hub பாக மாற உள்ளதாக தெரிவித்தார்
