திருச்சி கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு இரண்டு தனியார் வேன்கள் புதுக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்தது. முதலில் சென்ற வேன் டிரைவர் விமான நிலையம் அருகே நின்று மாணவ- மாணவிகளை ஏற்றிக் கொண்டிருந்தார். பின்னர் அவர், வேனை வலதுபுறம் திருப்பினார். அப்போது பின்னால் வந்த வேன் முன்னால் சென்ற வேனின் மீது மோதியது. இதில் முன்னால் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், மாணவ- மாணவிகள் சிக்கிக் கொண்டு ஐயோ…அம்மா… என்று அலறினார்கள். உடனே, அந்த வழியாக சென்றவர்கள் தங்களது வாகனங்களை அங்கேயே நிறுத்தி விட்டு உள்ளே சிக்கிய மாணவ- மாணவிகளை ஒவ்வொருவராக மீட்டனர். இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் காயமடைந்தனர். அவர்களை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேனை மீட்டு சாலையோரம் நிறுத்தினர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments are closed.