திருச்சியில் வகுப்பறை வாசலில் பள்ளி மாணவனுக்கு சரமாரி பிரம்படி * நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? (வீடியோ இணைப்பு)
திருச்சி, பொன்மலைப்பட்டியில் திரு இருதய அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். வெளி மாவட்ட மாணவர்களுக்காக பள்ளியில் விடுதியும் செயல்பட்டு வருகிறது. 85 மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இந்தநிலையில் அந்தப் பள்ளியின் தாளாளர்,ஒரு மாணவனை பிரம்பால் சரமாரியாக அடிக்கும் வீடியோ வெளியாகி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வகுப்பறையில் சில வேலைகள் செய்ய கூறியதாகவும், அதை அந்த மாணவன் செய்யாத காரணத்தால் தாளாளர் அந்த மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி வட்டாரத்தில் விசாரித்தபோது, பள்ளியின் தாளாளருக்கும், முதல்வருக்கும் ஒத்து வராது என்றும், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இதனை ஒரு தரப்பினர் வீடியோ எடுத்து வெளியிட்டு உள்ளனர். இதுபோல பள்ளியில் பல பிரச்சனைகள் இருக்கின்றன என்று ரத்தின சுருக்கமாக சொல்லி முடித்தனர். எது எப்படி இருந்தாலும் எந்த ஒரு மாணவனையும் பிரம்பால் அடிக்கக் கூடாது, அப்படியே அந்த மாணவன் தவறு செய்திருந்தாலும் அன்பால் திருத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், பள்ளி மாணவனை பிரம்பால் சரமாரியாக தாக்குவது விதிமுறைகளை மீறிய செயலாக பார்க்கப்படுகிறது. ஆகவே, இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.