ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்காக அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதன்பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலா, தினகரன் ஆகியோரை அப்பதவிகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கியது. அதற்கு பதில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தநிலையில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். மனுவை ஏற்றுக்கொண்ட உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று ( 05.12.2023 ) தீர்ப்பளிக்கப்பட்டது. அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த சசிகலாவின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தற்போது அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.