திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா, மாங்கமப்புறம் வடக்கு தெருவை சேர்ந்த ஜெகன் என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு கோவிலில் இரவு பணியில் இருந்த அவர் இன்று(19.12.23) அதிகாலை சுமார் 5-30 மணி அளவில் கோவில் வளாகத்தில் யானை கட்டும் இடத்திற்கு எதிரில் உள்ள அலுவலக அறையில் வேட்டியால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவில் அலுவலகத்தில் இருந்து திருச்சி கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடம் சென்று ஜெகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஜெகன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை கோவிலில் தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஊழியர் மரணம் காரணமாக கோவில் நடை சாத்தப்பட்டது. பரிகார பூஜைக்கு பிறகு மதியம் 12 மணிக்கு மேல் நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.