தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலில் நடைபெறும் பூச்சொரிதல் விழா அதனை தொடர்ந்து நடைபெறும் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா ஏப்ரல்
6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் தேரோட்டம் 15ம் தேதி, செவ்வாய்க்கிழமை நடக்கிறது. தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்.15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் வருகிற மே 3 ம் தேதி வேலை நாளாக இருக்கும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.