பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும், இனி நிறுவன தலைவர் பிளஸ் தலைவர் பதவியை தானே ஏற்க இருப்பதாக அதிரடியாக அறிவித்தார். அதற்கு அன்புமணி, பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்டவன் நான்…ஆகவே, பாமக தலைவராக தொடர்ந்து செயல்படுவேன் என்று பதிலடியாக அறிவித்தார். தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டாக்டர் ராமதாசை சமாதானப்படுத்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் படையெடுத்த போதிலும் அவர் தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. இந்தநிலையில், இன்று(13-04-2025) காலை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்னை முன்னாள் மேயரும், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியுமான சைதை துரைசாமி வருகை தந்து ராமதாஸை சந்தித்து பேசினார். இதன்பின் வெளியே வந்த சைதை துரைசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், டி.என்.பி.எஸ்.சி-யில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவி வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்ததற்காக ராமதாஸ் என்னை பாராட்டி இருந்தார். அதனால், ராமதாஸை நேரில் சந்தித்து நன்றி கூறுவதற்காகவே வந்தேன் என்றார். ராமதாஸ், அன்புமணி என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது. தயவு செய்து அரசியல் பேச வேண்டாம் என கூறி புறப்பட்டு சென்றார்.

Comments are closed.