Rock Fort Times
Online News

சபரிமலை நடை நாளை திறப்பு- மண்டல சீசனில் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி…!

கார்த்திகை முதல் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பூஜை சபரிமலையில் மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது.  இந்த பூஜைகளின் நிறைவாக 41- வது நாள் மண்டல பூஜை நடைபெறும். இதற்காக சபரிமலை நடை நாளை(15-11-2024) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றி கோவிலை வலம் வந்து 18 படிகள் வழியாக கீழே இறங்கி ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்ப்பார்.  தொடர்ந்து அங்கு காத்திருக்கும் அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கான புதிய மேல் சாந்திகள் சபரிமலை – அருண்குமார் நம்பூதிரி, மாளிகைப்புறம் – வாசுதேவன் நம்பூதிரி ஆகியோரை கை பிடித்து அழைத்து சன்னிதி முன் அழைத்து வருவார். தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு புதிய மேல் சாந்திகளுக்கு அபிஷேகம் நடத்துவார். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.  நவம்பர் 16ம் தேதி அதிகாலை  3 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி அய்யப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி, நெய்  அபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து பூஜைகள் தொடங்கும். மண்டல சீசனில் தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். ஸ்பாட் புக்கிங் கவுண்டர் பம்பையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்