கேரள உயர்நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக, 18 ஆண்டுகளுக்கு பின்னர் 317 கோடி ரூபாய் செலவிலான மாஸ்டர் பிளான் திட்டம் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்கும். சபரிமலை வரும் பக்தர்களின் வசதிக்காக 2006-ல் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டது. பம்பை ஹில்டாப் கணபதி கோவில் பாலம் – 32 கோடி; மாளிகை புரத்திலிருந்து சந்திரன் ரோடுக்கு பக்தர்கள் திருப்பிச் செல்ல பாலம் 40 கோடி; புதிய பிரசாத மண்டபம், மேல் சாந்தி மடங்கள், கோவில் தெரு மற்றும் அபிவிருத்தி ஆகியவை 98 கோடி; நிலக்கல் பார்க்கிங் கிரவுண்டில் பக்தர்கள் தங்கு மையம், குடிநீர் வசதி 145 கோடி; சன்னிதானம் அன்னதான மண்டபம், பக்தர்கள் தங்கும் கட்டிடங்களில் தீயணைப்பு வசதிகள் 4 கோடி, இப்படி பல்வேறு திட்டங்கள் இந்த பிளானில் இடம் பெற்றுள்ளது. 2006 -ல் இந்த திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கியது. இதை செயல்படுத்த 2009-ல் கேரள உயர்நீதிமன்றம் மேற்பார்வையில் உயர் அதிகாரி கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால், தேவசம்போர்டு மற்றும் வனத்துறை இடையிலான நிலப்பிரச்சனை காரணமாக இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தடங்கல் ஏற்பட்டது. இதையடுத்து, வழக்கறிஞர் கமிஷன நியமித்து, நிலத்தை அளக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், வருவாய்துறை- வனத்துறை – தேவசம்போர்டு இணைந்து நிலஅளவீடு செய்து எல்லைகள் நடப்பட்டதால் நிலம் சம்பந்தமான பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, 18 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த சபரிமலை ” மாஸ்டர் பிளான் “திட்டம் இந்த சீசனுக்கு பிறகு தொடங்கும் என்று தேவசம் போர்டு கூறியுள்ளது.
Comments are closed.