நெல்லைக்கு ரயிலில் கட்டுக்கட்டாக கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பறிமுதல்- பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்டதா?
நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக 39 மக்களவைத் தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் 17ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைவதால் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொருபுறம் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50,000 மேல் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் கார்களிலும் சோதனை நடைபெறுகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி 6 பைகளில் கட்டு கட்டாக கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பணத்துடன் பிடிபட்ட புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.