காவிரி உள்ளிட்ட ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.374 கோடியில் ‘நதிக்கரை மேம்பாடு திட்டம்…* சட்டப்பேரவையில் அறிவிப்பு..!
2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.17) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் பல துறைகளுக்கு குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் ஓடும் காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி போன்ற ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் நதிக்கரை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.374 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், விற்பனைப் பகுதிகள் உருவாக்கம், தெரு விளக்குகள் நிறுவல் மற்றும் அழகிய பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட நவீன வசதிகள் இடம்பெறும். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1,996 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.22,090 கோடி வழங்கப்பட்டுள்ளது. திருப்பெரும்புதூர் பகுதியில் ரூ.706 கோடி மதிப்பீட்டில் 18,720 படுக்கை வசதிகளுடன் ‘இந்தியாவின் மிகப்பெரிய பணியாளர் விடுதி’ அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு ரூ.4,282 கோடி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.1,943 கோடி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நீர்வளத் துறைக்கு ரூ.10,076 கோடி வழங்கப்பட்டுள்ளதுடன், பால் பண்ணைகள் ரூ.758 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட உள்ளன. இந்த நிதி ஒதுக்கீடுகள் மாநிலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை முன்னேற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Comments are closed.