கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீடு, 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்- தமிழக பட்ஜெட்டில் தாராளம்…
தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இன்றைய தினம்(19-02-2024) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். அப்போது அவர் பேசுகையில், நூற்றாண்டு கண்ட இந்த சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழர்களின் எண்ணங்களை அறிவிப்பாக மாற்றிடும் வகையில் பட்ஜெட் உரை அமையும். பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்திட வேண்டிய சூழலில் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். ஆழி சூழ் தமிழ் நில பரப்பில் அழையா விருந்தாளியாக அவ்வப்போது வரும் இயற்கை பேரிடர்கள் ஒரு பக்கம். கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்ளும் மத்திய அரசு மறுபக்கம். இதற்கிடையே, தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல உதவும் வரவு செலவு திட்டத்தை உருவாக்கிட வேண்டிய தேவைகள் எழும்போதெல்லாம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழிகாட்டுதல் மட்டுமே எங்களுக்கு கலங்கரை விளக்காக அமைந்துள்ளன என்று கூறினார்.
பின்னர் அவர், பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
* சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் பொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
* அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்.
* தமிழ் மொழியை நவீனப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.
* முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும்.
* ரூ.65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.
* கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும்.
* சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்.
* விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
* ரூ.1000 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும்.
* 5 ஆயிரம் ஏரி, குளங்களை புனரமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
* 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு.
* முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம்.
* நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக்குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி.
* கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீடு.
* 2030க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். ஒரு கான்கிரீட் வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் ஒதுக்கப்படும் என்பன உள்பட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்று இருந்தன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.