அதிமுக பிரமுகரின் காரில் இருந்து ரூ.33 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மக்களவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பறக்கும் படை மூலம் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வேளச்சேரி மெட்ரோபம்பிங் ஸ்டேஷன் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனி 4-வது அவென்யூ சாலையில் சோழிங்கநல்லூர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து சோதனையிட்டனர். அதில், ரூ.33 லட்சத்து 37 ஆயிரத்து 500 இருந்தது. விசாரணையில், அந்த பணம் அடையாறு கோவிந்தராஜபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த கண்ணன் (47) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவர் அதிமுக தென் சென்னை கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளராக உள்ளதும் தெரியவந்தது. பணம் குறித்து கேட்டபோது, “மதுபானக் கூடத்தை நண்பர் ஒருவருடன் இணைந்து ஆதம்பாக்கத்தில் நடத்தி வருவதாகவும், அதன்மூலம் கிடைந்த பணத்தை எடுத்துச் செல்வதாகவும் கண்ணன் கூறியுள்ளார். ஆனால், பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து நுங்கம்பாக்கத்தில் உள்ளவருமானவரித் துறை அதிகாரிகளிடமும் தெரிவிக்கப்பட்டது. பணமும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.