Rock Fort Times
Online News

சாலை விபத்தில் உயிரிழந்த திருச்சி போலீஸ் ஏட்டுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி….!

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு ....

திருச்சி மணிகண்டம் தீரன் மாநகரை சேர்ந்தவர் அகிலன் (வயது 20). இவர், திருச்சியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் மதன் பிரசாத் (19). சம்பவத்தன்று இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி மன்னார்புரத்தில் இருந்து பி.என்.டி.காலனி அருகே வந்து கொண்டு இருந்தனர். அப்போது கீழே விழுந்த ஹெல்மெட்டை எடுக்க அகிலன் நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளாா். அப்போது அந்தப் பகுதியில் பணியில்  இருந்த திருச்சி நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஸ்ரீதர் (45) என்பவர் சாலையில் விழுந்த ஹெல்மெட்டை எடுத்து கொடுத்துள்ளார். அப்போது மன்னார்புரத்தில் இருந்து வந்த ஒரு கார், ஸ்ரீதர் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஸ்ரீதருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் நின்று கொண்டிருந்த அகிலன், மதன் பிரசாத் ஆகியோரும் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஸ்ரீதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனை அடைந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், திருச்சியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் தலைமைக் காவலர் ஸ்ரீதர் உயிரிழந்திருப்பது காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். தலைமைக் காவலர் ஸ்ரீதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். விபத்தில் உயிாிழந்த காவலா்  ஸ்ரீதருக்கு மனைவி சுமித்ரா , மகன்  இந்திாியன் மற்றும்  இனியா என்ற மகளும்  உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்