சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி ஆர்டிஓ குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை, ஜீயபுரம் அருகே இன்று( ஜூன் 19) ஏற்பட்ட சாலை விபத்தில் திருச்சி மாவட்டம், முசிறி வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) ஆரமுத தேவசேனா உயிரிழந்தார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆர்டிஓ குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மேக்குடி கிராமம், திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை, கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா இன்று காலை நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து மோதியதில் முசிறி வருவாய் கோட்டாட்சியரின் நான்கு சக்கர வாகனம் நிலைதடுமாறி அருகில் பழுது பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது எதிர்பாதாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன். முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனாவின் உயிரிழப்பு வருவாய்த் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரமுத தேவசேனாவின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்த அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் 1 கோடி பெற்று வழங்கப்படும். மேலும், அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.