திருச்சி பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகர் 2-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 67). இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றிய அவர் பின்னர் ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். இந்த நிலையில் தனது மகளுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக வெப்சைட்டில் சென்று பார்த்தார். அதில் கஸ்டமர் கேர் நம்பர் ஒன்று இருந்தது. பின்னர் அந்த கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த மர்ம நபர் ஒரு லிங்க்கை அனுப்பி வைத்தார். மேலும் அவர் கூறியபடி, எனிடெஸ்க் அப்ளிகேஷன் என்னும் செயலியை டவுன்லோட் செய்து உள்ளார். இதன் மூலம் செல்வராஜின் செல்போன் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். அதைத்தொடர்ந்து அந்த நபர் பேடிஎம் வாயிலாக ரூ.1 செலுத்த கூறியுள்ளார். அப்போது செல்வராஜ் பதிவிட்ட ரகசிய எண்களை தெரிந்து கொண்டு அதன் வாயிலாக அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 899 பணத்தை தனது கணக்கிற்கு மாற்றி மோசடி செய்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் இதுகுறித்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.