ராக்போர்ட் டைம்ஸ் செய்தி எதிரொலி: திருச்சி குழுமிக்கரை பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்- (வீடியோ இணைப்பு)..
திருச்சி-சென்னை பைபாஸ் சாலை குழுமிக்கரை மெயின் ரோடு பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த சாலையானது, காந்தி மார்க்கெட், சங்கிலியாண்டபுரம், துரைசாமிபுரம், மல்லிகைபுரம், பிச்சை நகர், வரகனேரி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முக்கிய சாலையாக உள்ளது.
இதனால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இதன் வழியாக சென்று வருகின்றன. குழுமிக்கரை மெயின் ரோடு நுழைவு வாயிலில் ஆரம்பித்து சாலை முடிவு வரை ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடந்தன. குப்பைகளை அகற்ற வேண்டிய மாநகராட்சியே சேகரித்த குப்பைகளை இந்தப் பகுதியில் கொட்டி வந்தன. மேலும், சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்தும் குப்பைகள் இந்தப் பகுதியில் கொட்டப்பட்டன. இதனால், இந்த சாலை வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டுதான் சென்றனர்.
அப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. ஆகவே, இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும், இனி இந்த சாலை பகுதியில் குப்பைகள் கொட்டாதவாறு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி ராக்போர்ட் டைம்ஸ் சார்பாக வீடியோ வெளியாகி இருந்தது. இதன் எதிரொலியாக இன்று மாநகராட்சி ஊழியர்கள் குழுமிக்கரை பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகளை உடனடியாக அகற்றினர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட ராக்போர்ட் டைம்ஸ் மற்றும் உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.