மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மனிதநேய அனைத்து வர்த்தகர் நலச் சங்க திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாலக்கரையில் இன்று நடந்தது. மனிதநேய மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா, செயலாளர் அஷ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மனிதநேய அனைத்து வர்த்தக நலச் சங்க மாவட்ட தலைவர் கபீர் அகமது, செயலாளர் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் காஜா மொய்தீன் ,முஸ்தபா ,காசிம், அகமத்துல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மனிதநேய அனைத்து வர்த்தகர் நல சங்கத்தின் கீழ் 400க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம், கல்லூரி சாலை, என்.எஸ்.பி ரோடு, தெப்பக்குளம், தெப்பக்குளம் ஆர்ச், தெப்பக்குளம், பெரிய கடை வீதி, சிங்காரத்தோப்பு காமராஜ் வளைவு போன்ற பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆயத்த ஆடைகள்,செருப்புகள், பேன்சி பொருட்கள் விளையாட்டு பொருட்கள் உணவுப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு சாலையோர சிறு வியாபாரிகளுக்கான தேசிய கொள்கையை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி உள்ளது.அதேபோன்று தமிழக அரசும் சாலையோர சிறு வியாபாரிகளுக்கான அரசாணை வெளியிட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகின்றன. அரசின் சட்டத்தில் சாலையோர வியாபாரிகள் எந்த தெருவில் தொழில் செய்கிறார், என்ன வியாபாரம் செய்கிறார் என்பன போன்ற தகவல்கள் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட அனைத்து அடையாள அட்டைகளில் மேற்கூறிய விபரங்கள் இல்லாமல் அரைகுறையான தகவல்களுடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் உண்மையான சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பின்னர் எங்கள் சங்கத்தின் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் எங்கள் சங்கத்தைச் சேர்ந்த 310 வியாபாரிகளின் முழு விவரமும் புகைப்படத்துடன் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னரும் சரியான விபரங்களுடன் கூடிய அடையாள அட்டை இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் உடனடியாக மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சங்க சட்டத்திற்கு உட்பட்டு முழு தகவல்களுடன் கூடிய அடையாள அட்டைகளை உடனே வழங்க வேண்டும். அது மட்டுமல்லாமல் டவுன் வெண்டிங் கமிட்டி அமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வரை சட்டத்திற்கு புறம்பாக எங்கள் சங்க வியாபார உறுப்பினர்களின் கடைகளை அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபடாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .தரைக்கடை வியாபாரிகள் ஆண்டாண்டு காலமாக வியாபாரம் செய்து வரும் பகுதிகளான என்.எஸ்.பி ரோடு, சிங்காரத்தோப்பு ,பெரிய கடை வீதி, தேரடி பஜார், தெப்பக்குளம், தென்கரை, தெப்பக்குளம் ஆர்ச் ,காமராஜர் வளைவு, சத்திரம் பஸ் ஸ்டாண்ட், காலேஜ் ரோடு போன்ற பகுதிகளை வியாபார ஸ்தலங்களாக மாநகராட்சி நிர்வாகம் அறிவிக்க வேண்டும்.இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.