கிராமங்கள் தோறும் ஆர்.ஓ யூனிட் – ஒவ்வொரு யூனியனிலும் இலவச ஜேசிபி! “சொந்த” வாக்குறுதிகளால் ஓட்டுகளை அறுவடை செய்யும் மண்ணச்சநல்லூர் கதிரவன்..!
திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தற்போதைய எம்எல்ஏவான சீ.கதிரவனே திமுக சார்பில் மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இதே மண்ணச்சநல்லூர் தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டார். அப்போது, தான் வெற்றி பெற்றால் தனது மருத்துவமனையில் தொகுதி மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையும், பட்டப்படிப்பு படிக்க ஆசைப்படும் மாணவர்களுக்கு கட்டண சலுகையும் அளிக்கப்படும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்திருந்தார். அதேபோலவே, வெற்றி பெற்ற பிறகு இரண்டு வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் காட்டினார். இது தொகுதி முழுவதும் இவருக்கான இமேஜை பல மடங்கு உயர்த்தியது. இந்நிலையில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை மண்ணச்சநல்லூர் மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட ஸ்ரீதேவி மங்கலம், பெரகம்பி, சனமங்கலம், எம்.ஆர் பாளையம், சி.ஆர்.பாளையம், திருப்பட்டூர், சிறுகனூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். ஏற்கனவே நேற்றைய தினம் மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற கூட்டணி கட்சியினருடனான செயல் வீரர்கள் கூட்டத்தில், தனக்கு ஆதரவாக வேட்பு மனு தாக்கல் செய்த 57 பேரையும் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்வேன் எனவும், தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு கிளைக் கழகத்திலும் அதிகப்படியான வாக்குகளை பெற்று தரும் கிளைச் செயலாளர்களுக்கு மொத்தமாக 130 பைக்குகளை வாங்கி தருவேன் எனவும் உறுதியளித்தார் . எனவே, முதல் நாள் பிரச்சாரமான இன்று மக்களுக்கு ஏதேனும் சிறப்பு சலுகைகளை எம்எல்ஏ அறிவிப்பாரா? என்கிற ஏக எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் இருந்தது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் இலவச ஆர்.ஓ யூனிட்டுகளை தனது சொந்த செலவில் அமைத்து தருவேன் எனவும், தொகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் சொந்த பணத்திலிருந்து டாட்டா ஹிட்டாச்சி, டிராக்டர், ஜேசிபி ஆகியவற்றை வழங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார். எம் எல் ஏ கதிரவனின் இந்த சொந்த வாக்குறுதிகளை கேட்ட தொகுதி மக்கள் எம்.எல்.ஏ ன்னா எங்க அண்ணன் கதிரவன் தான் என ஏகபோக குஷியில் இருக்கின்றனர்.

Comments are closed.