“2026-ம் ஆண்டு தமிழகத்தை காக்க புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவதாரம் எடுக்கும் தளபதியே”- விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் திகு…திகு…!
உலகம் முழுவதும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். சமூக வலைதளங்கள் வாயிலாகவும் புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் தங்களது தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர். சிலர் போஸ்டர்கள் அச்சடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளனர். அந்தவகையில் தேனி மாவட்டம், பெரியகுளம் நகர தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பெரியகுளம் முக்கிய பகுதிகளில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ‘வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழகத்தை காக்க புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவதாரம் எடுக்கும் தளபதியே’ என்ற வாசகத்துடன் எம்ஜிஆர் தொப்பி, கண்ணாடி அணிந்திருப்பது போல விஜய்க்கும் தொப்பி, கண்ணாடி அணிவிக்கப்பட்டு சுவரொட்டி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. விஜய் அரசியலில் நுழைந்து முதல் மாநில மாநாட்டையும் வெற்றிகரமாக முடித்துள்ளார். தற்போது அறிக்கைகள் வாயிலாகவும் பொது மக்களுக்கு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் தான் நமது இலக்கு என்று விஜய் சொல்லி இருக்கிறார். அதன்படி, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிலைப்படுத்தியும் எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தது போல விஜயும் ஆட்சியைப் பிடிப்பார் என்ற வகையில் இந்த போஸ்டர்கள் பெரியகுளம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.