Rock Fort Times
Online News

திருச்சியில் வருவாய்த்துறை ஊழியர்கள் 2-வது நாளாக தர்ணா- பணிகள் பாதிப்பு…

திருச்சி காஜாமலையை சேர்ந்த கார்த்திக் உள்பட 2 பேர் அரியமங்கலத்தில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் ரூ.22 கோடி அடமானக்கடன் வாங்கி சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர். ஆனால், அவர்கள் கடன் தொகையை உரிய நேரத்தில் திரும்ப செலுத்தவில்லை. மேலும், 2019-ம் ஆண்டு நிறுவனத்தை மூடி விட்டனர்.இதனால், அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்து கொடுக்க மாவட்ட கலெக்டருக்கு வங்கி நிர்வாகம் மனு கொடுத்தது. மனுவை விசாரித்த கலெக்டர் மா.பிரதீப் குமாா் ஐஏஎஸ்  , அடமான சொத்துக்களை ஜப்தி செய்து வங்கி வசம் ஒப்படைக்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, நேற்று முன்தினம் திருச்சி மேற்கு தாலுகா மண்டல துணை தாசில்தார் பிரேம்குமார் தலைமையில் 4 வங்கி ஊழியர்கள் காஜாமலை லூர்துசாமிபிள்ளை காலனியில் உள்ள அடமான சொத்தை ஜப்தி செய்ய சென்றனர். அப்போது அந்த இடத்தின் உரிமையாளர் கார்த்திக் உள்பட 15 பேர் மண்டல துணை தாசில்தாரையும், வங்கி ஊழியர்களையும் உருட்டுக்கட்டையால் தாக்கியதாக தெரிகிறது.இதில் படுகாயம் அடைந்த 5 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

                                   

இதுகுறித்த புகாரின்பேரில் கார்த்திக் உள்பட 15 பேர் மீது கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் மண்டல துணை தாசில்தாரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பணியாற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் சுமார் 750-க்கும் மேற்பட்டோர் நேற்று கருப்பு பட்டை அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ், நேரடி நியமன அலுவலர் சங்க மாநில செயலாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பிரபு ஆகியோர் தலைமையில் பணிகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தினால் தாலுகா அலுவலகங்கள் பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. இதனால், பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக இந்த அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்