Rock Fort Times
Online News

விநாயகர் சிலைகள் வைக்க, ஊர்வலம் செல்ல கட்டுப்பாடுகள்: திருச்சி சிட்டி கமிஷனர் காமினி…!

வருகிற  செப்டம்பர் 7 -ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவும், 9 -ம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் கரைப்பு நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. விழா தொடர்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு, திருச்சி மாநகர காவல்
ஆணையர் காமினி  தலைமை தாங்கினார்.  இதில்,  சிலை அமைப்பாளர்கள், இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் காமினி  பேசுகையில்,  விழா நடத்துபவர்கள் விநாயகர் சிலையை நிறுவுவதற்கான உரிய அனுமதியை பெற வேண்டும். சிலை அமைக்கக்கூடிய இடம் தனியார், மாநகராட்சி மற்றும் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற வேண்டும். சிலை அமைக்கப்படும் இடங்களில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய கீற்று, ஓலை, கம்பு போன்றவற்றால் போடப்படும் மேற்கூரை அமைக்காமல் தகரம் போன்றவற்றால் அமைக்க வேண்டும். தீப்பற்றினால் அவற்றை அணைப்பதற்கு தேவையான தீயணைப்பு உபகரணங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.  ஒலிப்பெருக்கிகளின் சத்தத்தை குறிப்பிட்ட அளவு மட்டுமே வைப்பதுடன் காலை 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சிலைகள் கரைப்பு நாளன்று மாலை 3 மணி அல்லது 4 மணிக்கு ஊர்வலத்தை தொடங்கி, இரவு 10 மணிக்குள் முடிப்பதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.  ராசயனப் பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் அமைக்கக்கூடாது. வழிபாட்டுதலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அருகே விநாயகர் சிலைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். வகுப்புவாத வெறுப்பு மற்றும் பிற மதங்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் எழுப்பப்படும் முழக்கங்கள்  எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படாது.  சிலைகளை கரைப்பதற்கு நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்.  நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் சமுதாய தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு ஆதரவாக எந்தவிதமான விளம்பர பலகைகளும் வைக்கக் கூடாது. கூம்பு வடிவிலான ஒலி பெருக்கிகளை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் விநாயகர் சிலைகள் அமைப்பது மற்றும் ஊர்வலம் நடத்த வேண்டும். சிலை அமைப்பாளர்கள் யாரும் மது அருந்திவிட்டு வந்து பிரச்சனை ஏற்படுத்தக்கூடாது.  இதனை மீறினால் சிலை அகற்றப்படும் என அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்