நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து கள்ளப்படகு மூலம் இலங்கைக்கு அகதிகள் செல்ல இருப்பதாக மாவட்ட க்யூ பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி சிவசங்கரன் தலைமையில் ஃக்யூ பிரிவு காவல்துறையினா் வேளாங்கண்ணியில் உள்ள விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வேளாங்கண்ணியில் உள்ள விடுதி ஒன்றில், தூத்துக்குடி மாவட்டம் குளத்துவாய்ப்பட்டி முகாமை சேர்ந்த 6 பேரை காவல்துறையினா் கைது செய்தனர். இந்த 6 போிடமும் நடத்திய விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பதிவு செயயப்படாத கள்ள விசைப்படகில் இவர்கள் இலங்கை தப்பி செல்ல திட்டமிட்டதும், இதற்காக தங்களது முகாமில் இருந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு புறப்பட்டு வந்து வேளாங்கண்ணியில் அறைகள் எடுத்து தங்கியிருப்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் கள்ள படகில் இலங்கை செல்வதற்காக, 17 லட்சம் ரூபாய் பணம் செல்வத்திற்கு கொடுப்பதாக பேசி முடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து கள்ளப்படகில் தப்பி செல்ல கொடுக்க வைத்திருந்த 17 லட்ச ரூபாயை காவல்துறையினா் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 6,அகதிகளிடம் நாகை ஃக்யூ பிரிவு காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.