Rock Fort Times
Online News

கட்சி கட்டளையிட்டால் விஜயை எதிர்த்து போட்டியிட தயார்- காயத்ரி ரகுராம்…!

கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதிமுக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. புதிதாக கட்சி தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய்யுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட விரும்புகிறது. இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் , நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம், தலைவர் பதவி பறிபோய் விடுமோ? என்ற பயத்தில் பாஜகவுடன் கூட்டணி சேர கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக தலைவர்களுக்கு தமிழ்நாட்டு மண்ணின் வலியும் தெரியாது, தமிழ்நாட்டின் உணர்வும் புரியாது. 2026 சட்டமன்ற தேர்தலில், அதிமுக தலைமை அனுமதித்தால், தவெக தலைவர் விஜய்யை எதிர்த்து போட்டியிட தயார். தொகுதி மறுவரையறை என்பது பாஜகவின் சூழ்ச்சி தந்திரம். தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து எதை கேட்டாலும் அதை திசை திருப்புவதில் தான் திமுக ஆட்சி இருக்கிறது. தன்னுடைய மகனை எப்படி வளர்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார்களே தவிர இங்கிருக்கக் கூடிய மக்களுடைய பிள்ளைகளை வஞ்சிக்கிறார்கள். இதே ஜெயலலிதா இருக்கும்போது இதுபோன்ற குற்றச்செயல்கள் நடந்தது என்றால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு போலீஸ் அதிகாரியோ அல்லது மற்ற துறை சார்ந்த அரசு அதிகாரிகளோ தவறு செய்தால் உடனடியாக அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். என்னைப் பொறுத்தவரை திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு பூஜ்ஜியம். திமுக ஆட்சியும் பூஜ்ஜியம். ஆனால் மாற்றி மாற்றி அப்பாவும் மகனும் அவர்களுக்குள்ளாகவே 100 மதிப்பெண் கொடுத்துக் கொள்கிறார்கள் என தெரிவித்துள்ளார். அதிமுக, தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் காயத்ரி ரகுராம் இவ்வாறு பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்