Rock Fort Times
Online News

பாரபட்சமின்றி போனஸ் வழங்க கோரி கருப்பு சட்டை அணிந்து பணியாற்றிய ரேஷன் கடை ஊழியர்கள்…

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தமிழக அரசு 20 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. ஆனால், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. கொரோனா காலத்தில் பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்பட்ட நிலையில், இப்போது 20 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கூட்டுறவு ஊழியர்களுக்கு மட்டும் 10 சதவீதம் போனஸ் அறிவித்திருப்பதை ஏற்க முடியாது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பிற செலவினங்களை தமிழக அரசே வழங்கி வரும் நிலையில் போனஸ் தொகையை மட்டும் கூட்டுறவு சங்கங்களின் லாப, நஷ்டத்தை பொறுத்து வழங்குவது ரேஷன் கடை ஊழியர்களுக்கு செய்யும் துரோகமாகும். ஒரே பணி செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு லாப சங்கங்களுக்கு 20 சதவீதம், நஷ்ட சங்கங்களுக்கு 10 சதவீதம், நலிந்த சங்கங்களுக்கு போனசே இல்லாமல் வெறும் ரூ.2 ஆயிரத்து 400 கருணைத் தொகை என்று பாரபட்சமாக வழங்கப்படுகிறது.
ஆகவே,அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள், கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க கோரி இன்றும் (10.11.2023), நாளை 11ந்தேதியும் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் கறுப்பு சட்டை அணிந்து பணியாற்றுவார்கள் என்று ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ராஜேந்திரன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து இன்று பணியில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கடைகளில் ரேஷன் கடை ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். நாளையும் ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து பணியில் ஈடுபட உள்ளனர். இன்று மாலை திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ரேசன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்