Rock Fort Times
Online News

திருநெல்வேலி மாநகராட்சி மேயரானார் ராமகிருஷ்ணன்…!

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த  51 பேர் அமோக வெற்றி பெற்றனர்.
அ.தி.மு.க கவுன்சிலர்கள் 4 பேர் உள்ளனர்.  திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க இன்று (05-08-2024) மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. புதிய மேயர் வேட்பாளராக தி.மு.க சார்பில் 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.  இந்நிலையில் மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுகபுத்ரா தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.  மேலும், வளாகத்தில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் கீதா தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.  இன்று காலை கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடைபெறும் ராஜாஜி மைய கூட்ட அரங்குக்கு வர தொடங்கினர். முன்னதாக தி.மு.க மேயர் வேட்பாளர் ராமகிருஷ்ணன், சைக்கிளில் தனது ஆதரவு கவுன்சிலர்கள்  புடைசூழ வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வந்தார்.  பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா முன்னிலையில் வேட்பு மனு வழங்கப்பட்டது. அப்போது ராமகிருஷ்ணன், வேட்பு மனுவை பெற்றுக் கொண்டு தேர்தல் நடக்கும் அரங்குக்கு சென்றார்.
அப்போது தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட 6-வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் அதிகாரிகளிடம் வேட்பு மனுவை வாங்கிக் கொண்டு தேர்தல் நடக்கும் அரங்கிற்கு சென்றார்.  தொடர்ந்து 2 பேரும் வேட்பு மனுவை நிரப்பி அதிகாரியிடம் வழங்கினர். அதனைத்தொடர்ந்து மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் தொடங்கியது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவருக்கு 30 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ்க்கு 23 வாக்குகளும் கிடைத்தன.  அதனைத்தொடர்ந்து  ராமகிருஷ்ணனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, மாநகராட்சி ஆணையர் வழங்கினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்