திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். இவர், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து அதிகாலை வாக்கிங் சென்ற போது மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து, தில்லை நகர் போலீசார் முதலில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் சென்றது.ஆனால், பல ஆண்டுகளாகியும் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.இருந்தபோதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. பின்னர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரியாக இருந்த ஜெயக்குமார் மாற்றப்பட்டார். இதையடுத்து, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் தஞ்சாவூர் எஸ்.பி. ராஜாராம் ஆகியோரை உயர்நீதிமன்றம் விசாரணை அதிகாரிகளாக நியமித்தது. அதன்படி விசாரணை பல்வேறு கோணங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக டிஐஜி வருண்குமார், சென்னை புழல் சிறையில் உள்ள மண்ணச்சநல்லூர் குணாவிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.அவரிடம் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த வழக்கு தொடர்பாக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுடலை என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.