Rock Fort Times
Online News

ராமஜெயம் கொலை வழக்கு: 13 பேரிடம் மீண்டும் விசாரணை…

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். இவர், கடந்த 2012-ம் ஆண்டு  படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை முதலில் திருச்சி மாநகர காவல் துறையினர் 12 தனிப்படைகள் அமைத்து விசாரித்த நிலையில், எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது.
தொடர்ந்து இவ்வழக்கு சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கப்பட்டும் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் டி.எஸ்.பி. மதன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வழக்கில் தமிழகத்தின் பிரபல ரவுடிகளான திண்டுக்கல்லை சேர்ந்த மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், திருச்சியை சேர்ந்த சாமி ரவி, மாரிமுத்து, சத்யராஜ், திலீப், தென்கோவன், ராஜ்குமார், சிவா, சுரேந்தர், கலைவாணன், கடலூர் சிறையில் இருக்கும் செந்தில் குமார் ஆகிய 13 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. இவர்களில் குடவாசலை சேர்ந்த தென்கோவனை தவிர மற்ற அனைவரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர். சோதனைக்கு ஒப்புக்கொண்ட 12 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை சென்னையில் நடைபெற்று அதன் அறிக்கை சிறப்பு புலனாய்வு குழுவிற்கு கிடைக்கப்பெற்றது. ஆனாலும், எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஆனால், ‘பாலிகிராப்’ சோதனையில் பங்கேற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது . அதையடுத்து உண்மை கண்டறியும் சோதனையில் பங்கேற்ற அனைவரிடமும் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் மீண்டும் விசாரணை நடத்த முடிவெடுத்தனர். அதன் அடிப்படையில் 13 பேரிடமும் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்