உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் முடி சூட்டிய நாளை அவர் பிறந்த நட்சத்திரமாகிய ஐப்பசி சதய நாளன்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா நேற்று ( 24.10.2023 ), காலை மங்கல இசையுடன் துவங்கியது. தொடர்ந்து திருமுறை பாடல்கள், கருத்தரங்கம், 1038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து சதய விழாவான இன்று ராஜராஜ சோழன் மீட்டெடுத்த பன்னிரு திருமுறை சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஓதுவார்கள் பன்னிரு திருமுறை பாடல்களை பாடி ஊர்வலமாக யானை மீது எடுத்துச் சென்றனர். இதற்கிடையில் பெரிய கோவில் வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்தார். இதில்,சதய விழா குழு தலைவர் செல்வம், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ராஜராஜ சோழன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சதய விழாவை முன்னிட்டு பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான மங்கல பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை தேவார இன்னிசை, நாட்டியாஞ்சலி, மேடை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக தஞ்சை, விழா கோலம் பூண்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.