புதிய தமிழகம் கட்சி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 30 ஆண்டுகள் தென்தமிழகத்தில் தொடர்ச்சியாக, அரசியல் களத்தில் நிலைத்து நின்று, செயல்பட்டு வரும் புதிய தமிழகம் கட்சிக்கு, கூட்டணியில் நமது கட்சியின் வலிமைக்கு ஏற்ப எண்ணிக்கையும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் வழங்குவதில் காட்டப்பட்ட பாரபட்சம் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் விவாதிக்கப்பட்டது. ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பேராதரவுடன் இயங்கும் புதிய தமிழகம் கட்சிக்கு உரிய அரசியல் அங்கீகாரம் அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளச் சூழலில், இத்தேர்தலில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் தன்னிகரில்லாத் தலைவர் கிருஷ்ணசாமியின் கரத்தை வலுப்படுத்துவதும், நம் மக்கள் ஒன்றுபட்டு நிற்பதும், நம்மை புறக்கணித்தவர்களை நாம் புறக்கணிப்பதும் மட்டுமே ‘உண்மையான அரசியல் வெற்றி’ என்பதை நிலைநாட்டும் பொருட்டு, புதிய தமிழகம் கட்சி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சி வலுவாக உள்ள 120 தொகுதிகளில், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள 60 முதல் 70 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அத்தொகுதிகளில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களின் பட்டியலை 29-ம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட உள்ளார். ஒன்றுபட்டு நின்று, நம்மை புறக்கணித்தவர்களை, நாம் புறக்கணிப்போம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.