திருச்சியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பதக்கம்:* கலெக்டர் வே.சரவணன் வழங்கினார்!
2025-26-ம் ஆண்டிற்கான “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டுப் போட்டிகள் மாநிலம் முழுவதும் 26.08.2025 முதல் 12.09.2025 வரை பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் 32 விளையாட்டுக்கள் 37 வகைகளில் மாவட்ட, மண்டல அளவில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது மாநில அளவிலான போட்டிகள் 13 மாவட்டங்களில் 02.10.2025 முதல் 14.10.2025 வரை நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவிலான குழுப் போட்டிகளில் கலந்துகொண்டு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளில் பங்கேற்பதற்கு, 38 மாவட்டங்களிலிருந்து 555 வீரர்கள் மற்றும் 570 வீராங்கனைகள், பங்கேற்க உள்ளனர். இப்போட்டிகள் 07.10.2025 முதல் 10.10.2025 வரை மாணவர்களுக்கும், 10.10.2025 முதல் 13.10.2025 வரை மாணவிகளுக்கும் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டிகள் 07.10.2025 முதல் 10.10.2025 வரை நடைபெற்றது. இப்போட்டிகளில் சென்னை மாவட்ட அணி முதலிடமும், தஞ்சாவூர் மாவட்ட அணி இரண்டாம் இடமும், திருச்சி மாவட்ட அணி மூன்றாம் இடமும் பெற்றன. முதலிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதம் 14 நபர்களுக்கு ரூ.10.50 லட்சமும், இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் 14 நபர்களுக்கு ரூ.7 லட்சமும் மற்றும் மூன்றாமிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் 14 நபர்களுக்கு ரூ.3.50 லட்சமும் வங்கி கணக்கு வாயிலாக வழங்கப்பட உள்ளது.இந்த போட்களில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இன்று (10.10.2025) திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் பங்கேற்று வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பதக்கம், பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசு தொகைகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில், உதவி ஆட்சியர் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபிசானு, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி மற்றும் பயிற்சியாளர்கள், மேலாளர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.