திருச்சியில் தனியார் பேருந்துகள் அட்டூழியம்: அதிவேகமாக பேருந்தை இயக்கியதை தட்டிக்கேட்ட பயணியை கன்னத்தில் அறைந்த ஓட்டுநர்… (வீடியோ இணைப்பு)
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தனியார் பேருந்து ஒன்று ( TN 45BP 5345) புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஸ்ரீரங்கத்தை சேர்ந்த டிரைவர் அன்புராஜ் ஓட்டினார். அந்த ஓட்டுநர், பேருந்தை மிகவும் வேகமாகவும், ஆபத்தான முறையிலும் இயக்கியதாக கூறபடுகிறது. இதனை அந்தப் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர், இவ்வளவு வேகமாக ஓட்டாதீர்கள் அல்லது என்னை இறக்கி விட்டு விடுங்கள் என ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கேட்டுள்ளார். அதற்கு செவி சாய்க்காத அந்த ஓட்டுநர் பஸ்ஸை மீண்டும் வேண்டுமென்றே வேகமாக இயக்கியுள்ளார். இதனை அந்தப் பயணி மீண்டும் கண்டித்ததால் அவருக்கும், ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்குள் அந்த பேருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை அடைந்தது. அப்போது அந்தப் பயணி கீழே இறங்கியதும் ஓட்டுனர் கீழே இறங்கி வந்து அந்தப் பயணியை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கன்னத்தில் இரு முறை அறைந்தார். இதனால் அந்த பயணி நிலை குலைந்து போனார். இந்த சம்பவத்தை யாரோ தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தனியார் பேருந்துகள் அட்டூழியம்:
இதுபோன்ற சம்பவம் திருச்சியில் இன்று நேற்று நடக்கவில்லை. பல காலமாக நடந்து வருகிறது. அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லை என்பதால் தனியார் பேருந்துகள் காத்து வாங்குகின்றன. இதனால், குறைந்த எண்ணிக்கையிலேயே தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. இதனால், அவர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்று பயணிகளை சகட்டுமேனிக்கு திட்டுவதும், பயணிகள் இறங்குவதற்குள் பேருந்தை எடுத்து செல்வதும் தொடர் கதையாகி வருகின்றன. இதுபோன்று பல அட்டூழியங்களில் அவர்கள் ஈடுபட்டு வருவதாக பயணிகளும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். பயணி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதோடு அவர்களின் லைசன்சை ரத்து செய்ய வேண்டும் என்பதே இந்த வீடியோவை பார்க்கும் பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
கைது:
இந்நிலையில் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் பயணியை தாக்கியது தொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுனர் அன்புராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.