திருச்சியில் சிறை கைதிகளால் நிர்வகிக்கப்படும் பெட்ரோல் விற்பனை நிலையம்: 2 அமைச்சர்கள் திறந்து வைத்தனர்…!
சிறைக் கைதிகள் தண்டனை காலம் முடிந்து வெளியே செல்லும்போது அவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு சிறைத்துறை அவர்களை நல்வழிப்படுத்தி வருகிறது. அந்தவகையில் சிறை கைதிகளே நிர்வகிக்கும் வகையில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, சென்னை உள்பட பிற மாவட்டங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சிறை கைதிகளே கையாளும் வகையில் பெட்ரோல் விற்பனை நிலையம் இன்று(14-08-2024) திறக்கப்பட்டது.
19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தை சிறைத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை தலைமை இயக்குனர் மகேஷ்வர் தயாள், மதுரை சரக சிறைத்துறை துணை தலைவர் பழனி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மகளிர் தனிச்சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையம் 24 மணி நேரமும் செயல்படும். திருச்சி மத்திய சிறையில் உள்ள நீண்ட நாள் சிறைவாசிகள் நன்னடத்தை அடிப்படையில் 21 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றுவார்கள். மூன்று ஷிப்டுகளாக அவர்கள் பணியில் இருப்பார்கள். இதிலிருந்து கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதி அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும். இதன்மூலம் சிறைவாசிகளின் மறுவாழ்வுக்காக இது பயனுள்ள வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
Comments are closed.