Rock Fort Times
Online News

பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்கியது: அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ‘விசிட்’!

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று (பிப்.9) தொடங்கியது. பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களை தவிர 28 பாடங்களுக்கு செய்முறை தேர்வு தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு செய்முறை தேர்வுக்கு தலா 20 மதிப்பெண்களும், அகமதிப்பீட்டிற்கு 10 மதிப்பெண்களும் என மொத்தம் 30 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. மீதியுள்ள 70 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும். இதனிடையே, நடப்பாண்டில் பிளஸ் -2 மாணவர்களுக்கு வருகிற மார்ச் 2 முதல் 26ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இந்த பொதுத்தேர்வினை பள்ளியில் பயின்று வரும் 7 லட்சத்து 99 ஆயிரத்து 892 மாணவர்களும், தனித்தேர்வர்களாக 26 ஆயிரத்து 441 மாணவர்களும் எழுதவுள்ளனர். இந்நிலையில், பொதுத்தேர்வை முன்னிட்டு செய்முறை தேர்வு இன்று (பிப்.9) தொடங்கியது. அரசு தேர்வு துறை இயக்குனரின் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இரண்டு கட்டங்களாக பிரித்து இந்த செய்முறை தேர்வினை நடத்துகின்றனர். முன்னதாக, சென்னையில் உள்ள நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற பிளஸ்-2 செய்முறைத் தேர்வினை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்