நடப்பாண்டு பொங்கல் பரிசுடன் சேர்த்து ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அதில், சேலை, வேட்டி, கரும்பு உள்ளிட்டவற்றுடன் சேர்த்து ரொக்கமும் தரப்படும். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரொக்கம் மட்டும் வழங்கப்படவில்லை. இதனிடையே, நடப்பாண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசுடன் சேர்த்து ரொக்கத்தையும் தமிழக அரசு வழங்கும் என பரவலாக பேச்சுகள் அடிபட்டு வந்தன. குறிப்பாக, இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருவதால் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு இருக்கும் என கூறப்பட்டு வந்தது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக பொங்கல் பரிசுடன் ரூ.3,000 ரொக்கப் பரிசை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் விழாவை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக, தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கவுள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். இதன்மூலம் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர். பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி சேலைகள் அனைத்தும், எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000 வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு என மொத்தம் ரூ.6936 கோடியை அரசு இதற்காக ஒதுக்கியுள்ளது. பொங்கல் திருநாளுக்கு முன்பாகவே, இந்த பொங்கல் பரிசு தொகுப்பை அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வரும் 8ம் தேதி முதலாகவே இதற்கான டோக்கன்கள் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.