Rock Fort Times
Online News

குட்கா மொத்த வியாபாரிகளை விட்டுவிட்டு சிறு வியாபாரிகளை மிரட்டி ‛கல்லா கட்டும்’ போலீசார் –  திருச்சி எஸ்.பி.வருண்குமார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வருண்குமார் ஐபிஎஸ் பொறுப்பேற்றதில் இருந்து குற்றச் சம்பவங்களை தடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கட்டப்பஞ்சாயத்து செய்து நிலங்களை அபகரிக்கும் கும்பலை “ஆபரேஷன் அகழி” என்ற பெயரில் “களை” எடுத்து வருகிறார். இது மட்டுமின்றி திருச்சி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, போதை மாத்திரை, போதை ஊசி விற்பவர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.  ஆனால், மண்ணச்சநல்லூர் பகுதியில் போலீஸ் அதிகாரிகள், தங்களுக்கு வேண்டிய போலீசாரை ‛ஸ்பெஷல் டீம்’ அமைத்து, குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படும் மளிகை, பெட்டிக்கடை, டீ கடை வியாபாரிகளை மடக்கிக் பிடிக்கின்றனர்.  அவர்களிடம் ‘உங்களை கைது செய்து சிறையில் அடைத்தால் விடுதலையாக ஒரு மாதமாகி விடும். இந்த கடுமையான வெயிலில், உங்களுக்கு சிறை வாழ்க்கை தேவையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என மிரட்டி, 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வசூல் வேட்டையாடி வருவதாக கூறப்படுகிறது .  சமீபத்தில் மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்ஞீலீ பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.  போலீசுக்கு பணம் கொடுத்தாலும் அடுத்த நாள் கடையை திறக்க முடியாது. பணம் வாங்கிய போலீஸ் அதிகாரிகள் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்து பின் கடைக்கு “சீல்” வைக்க செய்து விடுகின்றனர்.  15 நாட்களுக்கு பிறகு தான், கடையை திறக்க வேண்டும் குட்கா விற்பனைக்காக அபராதம் கட்டிய பிறகு மீண்டும் கடையை திறந்து கொள் என கூறி வருகின்றனர் என்கிறார்கள் அப்பகுதி வியாபாரிகள்.  இதற்கு காரணம் உடனே கடையை திறந்தால் பணம் வாங்கிக்கொண்டு கடையை திறக்க அனுமதித்து விட்டதாக தகவல் பரவும் என்று மேற்கண்ட நூதன நடவடிக்கையை போலீசார் கடைபிடிக்கின்றனர் என்றும் குமுறுகிறார்கள் வியாபாரிகள். அந்தவகையில் மண்ணச்சநல்லூர் காவல் நிலையங்கள் வாரத்திற்கு லட்சம் கணக்கில் வருவாய் ஈட்டப்படுவதாக கூறப்படுகிறது. குட்கா பொருட்களை மொத்தமாக விற்கும் வியாபாரிகளை விட்டுவிட்டு எங்களைப் போன்ற சிறு வியாபாரிகளை வளைத்து கல்லா கட்டும் காவல் துறையினர் மீது திருச்சி எஸ்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அங்குள்ள வியாபாரிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்