Rock Fort Times
Online News

மதுரை மாநாடு குறித்து 42 கேள்விகளை முன்வைத்த காவல்துறை…- சளைக்காமல் பதிலளித்த த.வெ.க. நிர்வாகிகள்…!

முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள த.வெ.க. தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக 2-வது மாநில மாநாடு மதுரையில் 25-ந்தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்ட நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் மாநாட்டு தேதியினை மாற்றுமாறு போலீஸ் அதிகாரிகள் கேட்டு கொண்டனர். அதனை ஏற்றுக்கொண்ட விஜய், மதுரையில் ஆக. 21-ந்தேதி மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் த.வெ.க.வின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் திருமங்கலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனுசுல் நாகரிடம் மாநாடு குறித்த மனுவை அளித்தனர். அப்போது, போலீசார் சார்பில் மாநாடு நடக்க உள்ள இடம், எவ்வளவு பேர் பங்கேற்பார்கள், தொண்டர்களுக்கான வாகன நிறுத்துமிடம், உணவு, குடிநீர் வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு அம்சங்கள், கூட்டத்தில் பங்கேற்கும் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட 42 கேள்விகளை முன் வைத்தனர். போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு தவெக தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய்யை தவிர வேறு எந்த முக்கிய பிரமுகர்களும் விருந்தினராக கலந்து கொள்ளவில்லை. மாநாட்டில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி இல்லை. பெண்களுக்கு என்று தனியாக பெண் தன்னார்வலர்கள், முதியவர்களுக்கு தனி இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படும். மாநாடு நடைபெறும் பகுதியில் வாகன நிறுத்தத்திற்கு சுமார் 400 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.300 பேருந்து, 750 வேன்கள் மற்றும் ஆயிரம் இருசக்கர வாகனங்கள் வர வாய்ப்புள்ளது. உள்ளே மற்றும் வெளியே செல்வதற்கு என்று 18 வழித்தடங்கள் அமைக்கப்படும் என்று பதில் அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்