தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில், இனி சினிமாவில் தான் நடிக்கப் போவதில்லை என்றும், அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் திடீரென அறிவித்தார். அதன்படியே, தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், நமது இலக்கு சட்டமன்றத் தேர்தல் தான் என்றும் அறிவித்தார். மேலும், அண்மையில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார். அடுத்து தமது கட்சியின் முதல் அரசியல் மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்த விஜய், அதற்கான இடத்தை தேர்வு செய்யுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஒரு குழு மாநாடு நடத்துவதற்கான இடத்தை தேடினர். திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இறுதியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி என்ற இடத்தில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. மாநாடு நடத்த அனுமதி வழங்குமாறு அங்குள்ள காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், மாநாடு நடத்த 21 கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த 21 கேள்விகளுக்கும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பதில் அளித்து திரும்பவும் மனு அளித்தனர். இந்தநிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு 21 நிபந்தனைகளுடன் போலீஸ் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி, வருகிற 23ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.