Rock Fort Times
Online News

திருச்சியில் மேலும் 7 இடங்களில் காவல் சோதனைச்சாவடி..

மாநகரை இணைக்கும் அனைத்து சாலைகளையும் கண்காணிக்க நடவடிக்கை!

திருச்சி மாநகரில் தற்போது 9 இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் உள்ள நிலையில், கண்காணிப்பு பணிகளை அதிகரிப்பதற்காக, மேலும் 7 இடங்களில் புதிதாக சோதனைச்சாவடிகளை அமைக்க மாநகர காவல் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாநகருக்குள் நாள் தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இங்கிருந்து பிற நகரங்களையும், ஊரகப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் ஆங்காங்கே தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக சமூக விரோதிகள், குற்றவாளிகள் நகருக்குள் வருவதைத் தடுக்கும் வகையிலும், மாநகருக்குள் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், வெளியூருக்கு தப்பிச் செல்லவிடாமல் மடக்கிப் பிடிப்பதற்காகவும் முக்கிய சாலைகளில் மாநகர காவல்துறை சார்பில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில் திண்டுக்கல் சாலையில் கருமண்டபம், மதுரை சாலையில் பஞ்சப்பூர், புதுக்கோட்டை சாலையில் செம்பட்டு, தஞ்சை சாலையில் காட்டூர் ஆயில்மில், சென்னை சாலையில் ஓய் சாலை சந்திப்பு, திருவானைக்காவல் கொள்ளிடம் சோதனைச்சாவடி, கரூர் சாலையில் குடமுருட்டி, வயலூர் சாலையில் ரெங்கா நகர், குழுமணி சாலையில் லிங்கநகர் ஆகிய 9 இடங்களில் காவல் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநகரத்தையொட்டிய ஊரகப் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் பெருகிவிட்டதாலும், புதிய இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாலும், இவை அனைத்தையும் கண்காணிப்பதற்கு ஏதுவாக மாநகரில் மேலும் சில இடங்களில் புதிதாக சோதனைச்சாவடிகள் அமைக்க மாநகர காவல் ஆணையர் எம்.சத்தியபிரியா ஐபிஎஸ் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, கே.கே.நகர்-ஓலையூர் சாலையில் உடையான்பட்டி மேட்டுக்கட்டளை வாய்க்கால், ஆட்சியர் அலுவலகத்தின் பின் பகுதியில் உய்யக்கொண்டான், கோரையாறு வாய்க்கால் சாலைகள் இணையக்கூடிய தொட்டிப்பாலம், எல்ஐசி காலனி- சாத்தனூர் சாலையில் கவிபாரதி நகர் பிரிவு சாலை, மேலகல் கண்டார்கோட்டையில் நாகம்மை வீதி அல்லது காவிரி நகர், உள் அரியமங்கலத்தில் குவளக்குடி வாய்க்கால் பாலம், கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை, சர்க்கார்பாளையம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள சந்திப்பு ஆகிய 7 இடங்களில் புதிதாக சோதனைச்சாவடிகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மாநகர காவல்துறை தொடங்கியுள்ளது.
இதுதவிர, திண்டுக்கல் சாலையிலுள்ள சோதனைச்சாவடியை தீரன்நகர் பகுதிக்கும், குழுமணி சாலையிலுள்ள சோதனைச்சாவடியை அரவனூர் பகுதிக்கும், வயலூர் சாலையிலுள்ள சோதனைச்சாவடியை ரெட்டைவாய்க்கால் பகுதிக்கும் மாற்றுவது குறித்து காவல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறும்போது, “மாநகரம் விரிவடைந்து வருவதால் அதற்கேற்ப கண்காணிப்பு பணிகளையும் மேம்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. எனவே, புதிய இணைப்பு சாலைகள், விரிவாக்கப் பகுதிகளைக் கணக்கில் கொண்டு மேலும் 7 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட உள்ளது. இதற்காக அமைச்சர் கே.என்.நேரு மூலமாக எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முயற்சி செய்து வருகிறோம். இவை அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தபிறகு, திருச்சி மாநகரில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வாகனங்களில் தப்பிக்க முயற்சிப்போரை சோதனைச்சாவடிகளில் எளிதில் தடுத்து நிறுத்திவிட முடியும். அதேபோல வாகனத்தணிக்கை மூலம் சந்தேக நபர்கள், சமூக விரோதிகள் வெளியிடங்களில் இருந்து மாநகருக்குள் நுழைவதையும் தடுத்து நிறுத்த முடியும்” என்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்