திருச்சியில் போலீஸ் குடியிருப்பில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை தட்டி தூக்கியது காவல்துறை…!
திருச்சி, பீமநகர் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (24). இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இன்று(நவ. 10) காலை பீமநகர் அருகே உள்ள தனது வீட்டில் இருந்து மார்சிங்பேடை பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தாமரைச் செல்வனின் இரு சக்கர வாகனத்தை வழிமறித்து மோதியுள்ளனர். இதில் நிலை தடுமாறி தாமரைச்செல்வன் கீழே விழுந்துள்ளார். அந்த கும்பல் அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். தாமரை செல்வன் உயிர் தப்பிக்க அருகிலிருந்த காவலர் குடியிருப்புக்குள் புகுந்தார். அப்போது, காவலர் குடியிருப்பில் வசித்து வரும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வீட்டுக்குள் தாமரைச்செல்வன் புகுந்து பதுங்கிக் கொண்டார். இருந்தாலும் அவரை விரட்டி வந்த கும்பல் காவலர் வீட்டுக்குள் புகுந்து தாமரைச்செல்வனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த கொலை சம்பவம் அதுவும் காவலர் குடியிருப்புக்குள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவ இடத்தில் திருச்சி மாநகர வடக்கு துணை ஆணையர் சிபின் விசாரணை மேற்கொண்டார். மோப்ப நாய் மூலமும் துப்பு துவக்கப்பட்டது. இந்த கொலையை செய்துவிட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் சல்லடை போட்டு தேடினர். இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக சதீஷ், பிரபாகரன், நந்து, கணேசன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரியல் எஸ்டேட் நிறுவன பணியாளர் தாமரைச்செல்வனுக்கும், சதீஷ்க்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சதீஷை, தாமரைச்செல்வன் அடித்ததால் பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை நடந்த சில மணி நேரங்களில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.