ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் போர் காரணமாக மேற்கு ஆசிய நாடுகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சமையல் கியாஸ் மற்றும் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற தகவல் தமிழகம் முழுவதும் பரவியது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் 3-வது நாளாக இன்றும் பல்வேறு இடங்களில் பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் நிரப்பினர். இதுதவிர குடிநீர் கேன், பாட்டில்களிலும் பெட்ரோல், டீசல் வாங்கி சென்றனர். தினசரி வேலை, அலுவலக பயணம் மற்றும் அவசர தேவைகளுக்கு வாகனங்கள் அவசியமாக இருப்பதால் பலர் பெட்ரோல் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. பாட்டில்கள், கேன்களில் கொண்டு செல்லப்படும் பெட்ரோலால் பெரும் விபத்து ஏற்படலாம் என்றும், பெட்ரோல் நிலையங்கள் இதுபோன்று பாதுகாப்பற்ற முறையில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என்றும், பெட்ரோல் நிலையங்கள் வாகனங்களில் மட்டுமே பெட்ரோல்களை நிரப்ப வேண்டும் என்பதே சட்ட விதி என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments are closed.