Rock Fort Times
Online News

முதல்வர் பெயரை பயன்படுத்த தடை கோரிய மனு தள்ளுபடி:- சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!

தமிழக அரசு துவங்க உள்ள புதிய திட்டங்கள் மற்றும் அமலில் உள்ள பழைய திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில், முதல்வரின் பெயர் மற்றும் புகைப்படம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, முதல்வரின் படம் இடம் பெற அனுமதி அளித்தார். ஆனால், அரசு திட்டங்களில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகில் ரோஹத்சி, வில்சன் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். அப்போது, இந்த வழக்கை இன்று(ஆகஸ்ட் 6) விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு தெரிவித்தது. அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் முதல்-அமைச்சர் பெயரை பயன்படுத்த தடையில்லை. இந்த திட்டம் தொடர்பான சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதிக்கிறது. தமிழக அரசின் நலத்திட்டங்களில் முதல்-அமைச்சரின் பெயரைப் பயன்படுத்துவதற்கு எதிரான மனு தேவையற்றது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படங்களை பயன்படுத்த தடைகோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டும் எதிர்த்து வழக்கு தொடர்ந்ததை ஏற்கமுடியாது. அனைத்து கட்சிகளும் இதுபோன்ற விவகாரத்தில் ஈடுபடுவதை மனுதாரர் எதிர்க்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு திட்டத்தை மட்டும் மனுதாரர் எதிர்ப்பதே இங்கு கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படும் எனில் அனைத்து திட்டங்களையும்தான் எதிர்க்க வேண்டும். அரசியல் சண்டைகள் என்பது தேர்தல் களத்தில் இருக்க வேண்டும். நீதிமன்றங்களில் இருக்க கூடாது. மனுதாக்கல் செய்ததில் உள்நோக்கம் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. முதல்-அமைச்சர் பெயரை பயன்படுத்த தடை கோரி வழக்கு தொடர்ந்த சி.வி.சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. ஒரு வாரத்திற்குள் அபராத தொகையை செலுத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்