பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள்…!* அருண்நேரு எம்.பி.அடிக்கல் நாட்டினார்!
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.91 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணி மற்றும் 15 -வது நிதி ஆணைய மானிய திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி ஆகிய புதிய திட்டப் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் நேற்று (14.08.2025) அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். குரும்பலூர் பேரூராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் விதமாக தடையின்றி குடிநீர் வழங்கிடும் பொருட்டு, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.91 கோடி மதிப்பீட்டில் குரும்பலூர் பேரூராட்சி வார்டு எண்.7, அண்ணா தெருவில் 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், வார்டு எண் 13 காமராஜர் தெருவில், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியும் கட்டும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இக்குடிநீர் திட்டப் பணிகளுக்காக பாளையம் ஏரி அருகே மற்றும் மேட்டாங்காடு பகுதியில் 2 திறந்தவெளி கிணறு அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் மேல்நிலை மற்றும் தரைமட்ட தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. மேலும், குடிநீர் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு விரைவாகவும், தரமாகவும் முடித்திடவும், திட்ட மதிப்பீட்டு கால அளவான ஓராண்டிற்குள் அனைத்து பணிகளும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பேரூராட்சிகளின் செயற்பொறியாளருக்கு அருண் நேரு எம்.பி. அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரகநாத் சிங், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ராஜ்குமார், திருச்சி மண்டல பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் ஜெ.சுப்ரமணியன், பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா ரமேஷ் (குரும்பலூர்), வள்ளியம்மை இரவிச்சந்திரன் (அரும்பாவூர்), இரா.பாக்கியலட்சுமி (பூலாம்பாடி), செயல் அலுவலர் க.தியாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.