முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் உயர்வு- முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்றைய( ஏப்ரல் 26) கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய மற்றும் மருத்துவப் படியினை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், “துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தைப் பற்றி இங்கே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். அதேபோன்று சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தியும் பேசுகிறபோது அதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். பல சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து என்னிடத்திலே கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய அமைப்பைச் சார்ந்தவர்களும் என்னை நேரடியாகச் சந்தித்து இதுகுறித்து மனுவைத் தந்திருக்கிறார்கள். அதையெல்லாம் பரிசீலித்து, முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதியம் 30 ஆயிரம் ரூபாய் என்பதை, 35 ஆயிரம் ரூபாயாக 01.04.2025 முதல் உயர்த்தி வழங்கப்படும். அதேபோல, தற்போது வழங்கப்பட்டு வரும் முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தைப் பொறுத்தவரையில், மாதம் 15 ஆயிரம் ரூபாய் என்பது, மாதமொன்றுக்கு 17,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அவர்களுக்கு ஆண்டொன்றிற்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி 75 ஆயிரம் ரூபாய் என்பது, ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். ஏற்கெனவே, இந்த ஆண்டின் மருத்துவப் படித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 ஆயிரம் ரூபாய், இதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பின்னர் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
Comments are closed.